மகிழ்ச்சியுடன் வாழ ஆரம்பித்தது சிங்கம்

மகிழ்ச்சியுடன் வாழ ஆரம்பித்தது சிங்கம்

காட்டில் இருந்த அந்த சிங்கம் தன்னைத்தானே நொந்து கொண்டது.

“எனக்கு இவ்வளவு பலம் இருந்தும், இரும்பு போன்ற உறுதியான நகங்களும், பற்களும் இருந்தும் என்ன பயன்? நிம்மதியாய் இருக்க முடியவில்லையே! கேவலம், இந்த சேவல் கூவும் சப்தம் என்னை நடுங்க வைக்கிறது. இம்மாதிரி பயந்துகொண்டே எத்தனை நாளைக்குத்தான் வாழ்வது?” என தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டது.

அப்போது அங்கே வந்த யானை, ரொம்பக் கவலையோடு வேகமாய் காதுகளை முன்னும் பின்னும் அசைத்தது. அதைப் பார்த்த சிங்கம், “என்னப்பா, உனக்கு என்ன கவலை? உன்னை எதிர்க்கும் அளவுக்கு எந்த பிராணியாவது இருக்கிறதா? உன் உடலைப் பார்த்தாலே எல்லாம் பயந்து ஓடுமே, நீ எதற்காகக் கவலையோடு இருக்கிறாய்?” என்று கேட்டது.

“இதோ, என் காதுக்கு அருகில் பறக்கும் குளவியைப் பார்த்தாயா? இது என் காதுக்குள் போய் கொட்டினால், உயிர் போவது போல் வலிக்கும். அதற்காகத்தான் குளவி காதுக்குள் சென்றுவிடாமல் இருக்க, காதுகளை ஆட்டிக்கொண்டே வருகிறேன்” என்றது யானை.

யானை சொன்னதைக் கேட்டதும் சிங்கம் யோசித்தது.

இந்த உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினங்களுக்கும் ஏதோ ஒரு கவலை இருக்கத்தான் செய்கிறது. அதுபோன்ற கவலைதான் எனக்கும் ஏற்பட்டுள்ளது. ஆனால், நான் கவலையை மட்டுமே நினைத்து வாழ்க்கையில் உள்ள இன்பங்களை இழந்து கொண்டிருக்கிறேனே என்று நினைத்து வெட்கப்பட்டது.

அன்றுமுதல் கவலையை விட்டுவிட்டு மகிழ்ச்சியுடன் வாழ ஆரம்பித்தது சிங்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *